வெயில் சுட்டெரிப்பதால் வேகமாக குறைகிறது பாபநாசம் அணை நீர்மட்டம் 61 அடியானது

வி.கே.புரம்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக பாபநாசம் அணை விளங்குகிறது. இந்த அணையின் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் பாபநாசம் அணை திகழ்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பாபநாசம் அணை நிரம்புவது வழக்கம். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை வெளுத்து கட்டியது. இதனால் பாபநாசம் அணை நவம்பர் மாதமே நிரம்பி வழிந்தது. அணை நிரம்பினாலும் உபரிநீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. இதனால் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணை திறக்கப்பட்டாலும், டிசம்பர் இறுதி வரை பாபநாசம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடித்தது.

வடகிழக்கு பருவமழை காலம், டிச.31ம் தேதியுடன் முடிந்ததால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. தற்போது பிசான சாகுபடி அறுவடை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியதாலும், போதிய நீர்வரத்து இன்றியும் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 61.35 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 83.57 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 304.75 கனஅடி வெளியேற்றப்படுகிறது.156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 73.19 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட  மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 81.34 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

Related Stories: