கேரளாவில் இன்று ஒரே நாளில் 36 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்: இன்று 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி; அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 36 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதலில் கொரோனா நோய் பரவியது. முதல் கட்டத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி சீனாவின் வுகானில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் 3 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைக்குபின் அவர்கள் உடல்நலம் தேறினர். அதன்பின் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அடுத்த சில வாரங்கள் இந்த நோய் கேரளாவில் பரவாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 8ம் தேதி இத்தாலியில் இருந்து வந்த பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மூலம் கேரளாவில் 2ம் கட்டமாக கொரோனா பரவ தொடங்கியது. இவர்கள் மூலம் அவர்களது உறவினர்கள் உட்பட பலருக்கும் நோய் பரவியது.

இதைத்தொடர்ந்து துபாய், குவைத், இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து கேரளா வந்த 100க்கும் மேற்பட்டோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் நோய் வேகமாக பரவ தொடங்கியது. இந்த 2வது கட்ட நோய் பரவலும் தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. புதிதாக நோய்தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா; கேரளாவில் இன்று ஒரே நாளில் 36 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். காசர்கோடு மாவட்டத்தில் 28 பேர், கண்ணூரில் 2 பேர், மலப்புரத்தில் 6 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் இன்று 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூர், பத்தனம்திட்டா மாவட்டங்களில் தலா ஒருவர் என இருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 379-ஆக அதிகரித்துள்ளது. இதில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 179 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 228 லிருந்து 194 ஆக குறைந்துள்ளது. இதுவரை மாநிலம் முழுக்க 1,16,941 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர். அதில் 1,16,125 பேர் வீடுகளிலும் 816 பேர்  மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 14,989 ரத்த மாதிரிகள் பரிசோதித்ததில் 13,802 பேரின் முடிவுகள் நெக்கட்டிவ்” ஆக வந்துள்ளது என கூறினார்.

Related Stories: