செம்பாக்கம் நகராட்சி சார்பில் நடைபெறும் காய்கறிகள் வினியோகத்தில் ஆளும்கட்சியினர் குறுக்கீடு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தாம்பரம்: செம்பாக்கம் நகராட்சி சார்பில் காய்கறிகள் வினியோகம் செய்வதில் அதிமுகவினர் குளறுபடி செய்வதாகவும், அதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவையை தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், வீடுகளில் முடங்கியுள்ள மக்களின் வசதிக்காக ஆங்காங்கே நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் சார்பில் நடமாடும் காய்கறி அங்காடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தெருக்களுக்கு வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவராக சமூக இடைவெளியில் வந்து காய்கறிகளை பணம் செலுத்தி பெற்று செல்கின்றனர். தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் உறவினர்கள் 28 பேர் வசிக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தெருக்களின் 16 நுழைவாயில்களில் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர்.இந்நிலையில், நடமாடும் காய்கறி அங்காடி மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் காய்கறிகளை ஆளும்கட்சியை சேர்ந்த நகராட்சி முன்னாள் தலைவர் தலையிட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஆளும்கட்சியினர் ஒவ்வொருவரை நியமித்து அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகளை வினியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு திமுக மற்றும் பிற கட்சிகள் சார்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, செம்பாக்கம் நகராட்சி அருகே இதேபோல ஆளும்கட்சியினர் முன்னிலையில் பொதுமக்களுக்கு காய்கறி விநியோகம் செய்து வந்தனர். அப்போது, திமுகவினர் மற்றும் இதர கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஆளும்கட்சியினர் நாங்கள்தான் இதை முன்நின்று செய்வோம் என கூறியதையடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதேபோல், செம்பாக்கம் நகராட்சியில் அதிமுகவினர் அனைத்து பணிகளிலும் தலையிட்டு, தாங்கள் செய்வதுபோல பல்வேறு குளறுபடிகளை செய்து வருகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘செம்பாக்கம் நகராட்சி ஆளும்கட்சியினர் இரண்டு கோஷ்டிகளாக உள்ளனர். இதில், ஒரு கோஷ்டியானை நகராட்சி முன்னாள் தலைவர், தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து அவர்தான் தற்போதும் தலைவர் போல அனைத்து பணிகளையும் அவர் உத்தரவின் பேரிலேயே நடத்திவருகிறார். இதற்கு நகராட்சி ஆணையரும் உடந்தையாக உள்ளார்.முன்னாள் தலைவருக்கு வேண்டப்பட்ட மூன்று வார்டுகளுக்கு மட்டுமே இதுபோன்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஆளும்கட்சியின் இரு கோஷ்டிகள் இடையே யார் பெரியவர்கள் என்ற போட்டி தொடர்ந்து நிலவி வருகிறது,’’ என்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரியிடம் கேட்ட போது, ‘இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு ஆளும்கட்சியினர் தங்களது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முயல்வது வேதனை அளிக்கிறது’ என்றார்.

Related Stories: