கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 12 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மண்டல அளவில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஏப். 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகையால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கருத்துகள் உலா வருகின்றன.இந்நிலையில் இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக முதல்வர் பழனிசாமி ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மண்டல அளவில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. 12 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு நடவடிக்கைக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் மண்டல அளவிலான குழு அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவுடன் சிறப்பு நடவடிக்கைக் குழு இணைந்து செயல்படும்.

அறிகுறியுடன் இருப்பவர்களை அதிவேகத்தில் கொரோனா பரிசோதனை நடைபெறுவதை மண்டல அளவிலான குழு உறுதி செய்யும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை சிறப்புக்குழு உறுதி செய்யும். மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு முறையாக சிகிச்சை தரப்படுகிறதா என்பதை குழு கண்காணிக்கும். இதையடுத்து ஊரடங்கை நீட்டிப்பதால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது குறித்து மண்டல அளவில் அமைக்கப்பட்டுள்ள 12 சிறப்புக்குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: