சென்னை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அதற்கான கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும் என்ற அரசின் ஆணையை எதிர்த்தும், இலவச சிகிச்சை வழங்கக் கோரியும் ஐகோர்ட்டில் வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் முன்னணியில் நின்று பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், நோய் தடுப்பு சாதனங்களை அரசு வழங்க வேண்டும்.