நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக குறையும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக சரியும் என, கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

 நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் இயங்கவில்லை. ஏற்றுமதி ஸ்தம்பித்து விட்டது. இதனால், இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கணிப்புகள் வெளியாகி வருகின்றன. கடந்த வாரம் பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பொருளாதார வளர்ச்சி குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட கணிப்பில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.9 சதவீதம் குறையும் என கூறியிருந்தது.

இதுபோல், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தற்போது கணிப்பு வெளியிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 1.6 சதவீதமாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கொரோனா பாதிப்புதான் முக்கிய காரணம். 1970, 1980 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இருந்த பொருளாதார மந்தநிலையை இந்தியா மீண்டும் சந்திக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்பு பிற நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்பை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மிக குறைத்து மதிப்பீடு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: