விருதுநகர் அருகே வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் விநியோகம்: நீண்ட குழாயில் சரசரவென வருது சரக்கு

விருதுநகர்: விருதுநகர் அருகே வீடு, வீடாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். இவற்றை சமூக இடைவெளியுடன் மக்கள் வாங்கி செல்கின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஏப்ரல் மாத ரேஷன் பொருட்கள் இலவசம் என அறிவித்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில், விருதுநகர் அருகே ஆவடையாபுரத்தில் டெல்லி சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வீடு, வீடாக விநியோகம் செய்யப்படுகிறது.

ஆவடையாபுரம் ரேஷன் கடையில் 1,376 கார்டுகள் உள்ள நிலையில், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அறிவுரையின்படி விற்பனையாளர், லோடுவேனை வாடகைக்கு பிடித்து பொருட்களை ஏற்றி, இறக்கி விநியோகம் செய்வதற்கு உறுதுணையாக 3 நபர்களை பணிக்கு அமர்த்தி பொருட்களை வீடு, வீடாக விநியோகம் செய்து வருகிறார். அரிசி, சீனி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வேனில் இருந்து குழாயில் போட்டு கார்டுதாரரின் சாக்கு மற்றும் பைகளில் விழும் வகையில் நீண்ட குழாய் வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து கார்டுகளுக்கு வீடு, வீடாக நான்கு நாட்களில் விநியோகம் செய்து விடலாம் என தெரிவிக்கின்றனர். மக்களும் சமூக இடைவெளி விட்டு பொருட்களை பெற்றுச் செல்கின்றனர்.

Related Stories: