நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபி: கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குன்றி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை 42 அடி உயரமும், ஒரு கி.மீ. நீளமும் உடையது. இந்த அணைக்கு, குன்றி, விளாங்கோம்பை, மல்லிதுர்கம் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர்,  10க்கும் மேற்பட்ட காற்றாறுகள் மூலம் வந்தடைகிறது.இந்த அணையில் இருந்து விநோபா நகர், குண்டேரிப்பள்ளம், மோதூர், வாணிப்புத்தூர், கள்ளியங்காடு, கொங்கர்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் ஓரளவு மழை பெய்து வருவதால் ஆண்டு முழுவதும் அணை நிரம்பியே உள்ளது. இந்தாண்டு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 32 அடியாக இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால், இரவு முழுவதும் அணைக்கு தண்ணீர் வரத்து இருந்ததால் அணை நிரம்பி உபரிநீர் 500 கன அடி அளவிற்கு வெளியேறியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், விநோபா நகர் உள்ளிட்ட பகுதியில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அணையில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேறுவதால் ஆற்றில் இறங்கவும், மீன் பிடிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் தடை விதித்தனர்.

வாழை மரங்கள் முறிந்தன

குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றி உள்ள பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், அந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. சேதமடைந்த வாழைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: