கொரோனா பாதிப்பால் தேர்வுகள் நடக்கவில்லை பல்கலைக்கழக கல்வியாண்டு தொடங்குவதில் சிக்கல்: அட்டவணையை மாற்ற திட்டமா?

வேலூர்:கொரோனா பாதிப்பால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பருவமுறை தேர்வுகள் நடக்காததால் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகள் காண வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு  கல்வித்துறையிலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் தேர்வுகள் நடக்கவில்லை.

இதற்கிடையே, அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், திட்டமிட்டபடி, அடுத்த சில மாதங்களில் தொடங்கப்பட வேண்டும். ஆனால் இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண தனிக்குழுவை அமைத்துள்ளது. இக்குழு அடுத்த கல்வி ஆண்டுக்கான அட்டவணையை மாற்றி அமைத்து, வகுப்புகள் தொடங்குவதை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடந்து வருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் இவ்விஷயத்தில் விரைந்து முடிவெடுப்பதுடன், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தங்கள் உயர்கல்வியை தொடர்வதற்கான முயற்சிகளில் இறங்கி தற்போது கொரோனா பிரச்னையால் விழிபிதுங்கி நிற்கும் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: