கோவையில் கொரோனா பாதித்து இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 மாத குழந்தை உள்பட 5 பேர் டிஸ்சார்ஜ்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் குணமடைந்தனர் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் கொரோனா தன் கோரப்பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் வைரஸ் தாக்கல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571-லிருந்து 621-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் குணமடைந்தனர் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியதாவது; கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 63 பேர் சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில், இவர்களில் 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் கோவையில் முதலாக அனுமதிக்கப்பட்ட 25 வயது மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அத்துடன், பெண் மருத்துவர், அவரது 10 மாத குழந்தை, பெண் மருத்துவரின் தாய், பணிப்பெண் ஆகிய 4 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேரும் இன்று ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசமணி தெரிவித்துள்ளார். 5 பேர் வீடு திரும்பியதால், மீதமுள்ள 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட 5 பேரும் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்முலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: