ஒரு மூட்டை வெண்டை விற்க கலெக்டர் அனுமதி தேவையா? சுவாமிமலை சுந்தர விமல்நாதன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர்

* மலர்கள் பூத்து மலர்ந்து கருகி விழுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கின்றனர். வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என்று தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விவசாயிகள் இப்போது பெரும் கஷ்டத்ைதயும், நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர். ஒரு பக்கம் சுகாதார காரணங்களை காட்டி வீட்டில் முடங்கி இருக்கின்றனர் மக்கள்; இன்னொரு பக்கம், விவசாய பொருட்களுக்கு போதுமான பாதுகாப்பு, விற்பனை உத்தரவாதம் இல்லை. உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சாதாரண நாட்களிலேயே போதிய விலை கிடைக்காது. இப்போது 144 தடை உத்தரவு வேறு அமலில் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. சொல்ல முடியாத வேதனையில் ஒவ்வொரு விவசாயிகளும் இருந்து வருகின்றனர். காய்கறி, மலர்கள், பழங்கள் விற்பனை செய்வதற்கு அரசு தடை இல்லை என்றாலும், காவல்துறை எல்லைகளை தாண்டி செல்ல மாவட்ட கலெக்டர் அளவில் அனுமதி பெற வேண்டியது உள்ளது.

மாவட்டத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மூட்டை பாகற்காய், 2 மூட்டை வெண்டைக்காயை விளைவித்து மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக அலைந்து திரியும் விவசாயிகளால் எப்படி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற முடியும். இப்படி அனுமதி வாங்குவது என்பது சாதாரண விவசாயியால் முடியாத காரியம். அனுமதி அளிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்தினால் மட்டும் தான் விவசாயிகள் இதனால் பயன் பெற முடியும்.  144 தடை உத்தரவு முடிய இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. இப்போதே இப்படி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்த தடை உத்தரவு நீடிக்குமேயானால் கடுமையான சிக்கல் விவசாயிகளுக்கு ஏற்படும்.

அது மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் இதனால் பாதிப்பு அதிகமாக ஏற்படும். இப்போதைக்கு காய்கறி, பழங்கள், மலர்களுக்கு பொதுமக்களிடம் தேவை இருக்கிறது. ஆனால் இவற்றை சந்தைப்படுத்துவதில் தான் மிகப் பெரிய தடை கற்கள் உள்ளது. விவசாயிகளால் அதை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். பல இடங்களில் பழங்கள், காய்கறிகள் அழுகி வருகிறது. மலர்கள் பூத்து மலர்ந்து கருகி விழுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கின்றனர். வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என்று தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலர்கள், காய்கறிகளை சேமிப்பதற்கு போதுமான குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் நம் நாட்டில் இல்லை.

அதே சமயம் சேமிப்பு கிடங்குகளில் வைத்து விற்பனை செய்யும் அளவிற்கு விவசாயிகளிடத்தில் நேரமும் இல்லை.  எந்தவொரு விழிப்புணர்வும் இல்லை. இதை சமாளிக்க அரசே காய்கறிகள், பழங்கள், மலர்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்து நியாயமான விலையில் மக்களிடம் விற்பனை செய்யலாம். நாட்டில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்குமான உறவை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். இப்போது சந்தையில் வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்கி தொகுப்பாக  அரசின் சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.  இவற்றை விவசாயிகளின் சாகுபடி களத்திலேயே கொள்முதல் செய்தால் விவசாயிகள் அனுமதி பெற வேண்டியதில்லை.

சமூக விலகலும் முழுமையாக கடைபிடிக்கப்படும். தற்போதைக்கு ஜூன் மாதம் வரையிலான காய்கறிகள், பழங்கள், மலர்கள் விவசாயிகள் சாகுபடியில் உள்ளது. தட்டுப்பாடு இல்லை. அதே சமயம் தேவையும் உள்ளது. நெல், அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவை இந்திய உணவு கழக சேமிப்பு கிடங்குகளில் போதிய அளவு இருப்பில் உள்ளது. இதனால் ஏழை விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள், மலர்கள் மீது அரசின் கவனம் இல்லையோ என்று எண்ண தோன்றுகிறது. விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படாமல் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் உற்பத்தி பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.

Related Stories: