கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலிருந்து கொரோனா அறிகுறியுடன் வாலிபர் தப்பி ஓட்டம்

கோவை : கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று தப்பி ஓடிய வாலிபரை போலீசார் பிடித்தனர்.  கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொரோனா  வார்டில் கொரோனா அறிகுறியுடன் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 29 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் நேற்று முன்தினம் இரவு மாயமானார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

நேற்று காலை சிங்காநல்லூர் பகுதியில் அந்த வாலிபர் ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தார். போலீசார் அவரை மடக்கி பிடித்து மீண்டும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிர் பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாகவும், வீட்டுக்குச் செல்வதற்கு வாகனம் இல்லாததால் ரோட்டிலேயே சுற்றிக் கொண்டு இருந்ததாகவும் அந்த வாலிபர் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த மருத்துவமனையில் இருந்து வட மாநிலத்தை சேர்ந்த கொரோனா நோய் அறிகுறியுடன் இளம்பெண் ஒருவர்  தப்பி சென்றார். இவரை போலீசார் வரதராஜபுரம் பகுதியில் மீட்டனர். எனவே, கொரோனா நோயாளிகள் தப்பி வெளியே செல்லாமல் இருக்க மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Related Stories: