144 தடை காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துற் 500 கி.மீ. நடந்து வந்த வாலிபர் சொந்த ஊர் செல்லும் வழியில் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துற்கு 500 கி.மீ. நடந்து வந்த வாலிபர் சொந்த ஊர் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 2 ஆயிரத்து 69 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 157 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி என பல்வேறு காரணங்களுக்காக சென்ற மக்கள் ஆங்காங்கே சிக்கித்தவித்து வருகின்றனர். அவ்வாறு சிக்கியவர்களில் பலர் உணவு, தங்குமிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காது என அஞ்சி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டபோதிலும் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். குறிப்பாக டெல்லியில் தினக்கூலி வேலை செய்துவந்த உ.பி., பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சாலை வழியாக நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களை அடைந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்துவந்த தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு நடந்து வரும் வழியில் உயிரிழந்துள்ள துயர சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் பாலசுப்ரமணி (21). இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வேலை செய்துவந்துள்ளார். இதையடுத்து, வெளிமாநிலங்களில் வேலைசெய்துவந்த தமிழகத்தை சேர்ந்த 26 பேருடன் இணைந்து லோகேஷ் பாலசுப்ரமணியும் சாலை வழியாக நடந்தே வந்துள்ளார். கடுமையான வெயிலில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபயணம் மேற்கொண்ட லோகேஷ் தனது 500 கிலோமீட்டர் பயணத்தின் வழியில் நேற்று முன்தினம் இரவு தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்தடைந்தார். மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அனைவரும் அங்கு உள்ள சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கியுள்ளனர்.

இந்நிலையில், வெயிலில் தொடந்து நடந்ததில் மிகவும் சோர்வடைந்திருந்த லோகேஷ் சக நடைபயணிகளுடன் முகாமில் உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த போது நிலைகுலைந்து மயங்கி கிழே விழுந்தார். லோகேஷ் பாலசுப்ரமணியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் உயிரிழந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த சக பயணிகள் அதிர்ச்சியில் உரைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, உயிரிழந்த லோகேஷ் பால சுப்ரமணியின் உடலை அவரது சொந்த ஊரன நாமக்கலுக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக சாலை வழியாக சுமார் 500 கிலோமீட்டர் நடை பயணம் செய்து நாமக்கல் மாவட்டத்திற்கு வர எண்ணிய லோகேஷ் பாலசுப்ரமணியம் இறுதியில் உயிரிழந்த உடலாக சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: