கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இன்று பிற்பகல் அனைத்து மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை

சென்னை: சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. 2,069 பேர்  கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்தார். இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர  முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.  

குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிஹ் ஜமாத் அமைப்பு நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், நாட்டில் அமல்படுத்தப்பட்டு   உள்ள 21 நாள் முடக்கம், உரிய பலனில்லாமல் போயுள்ளது. அதே நேரம், கொரோனா பரவலின் வேகமும் நாடு முழுவதும் தற்போது தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ  கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் போலீஸ் டிஜிபிக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது, தப்லிக் ஜமாத்  மத நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் போர்கால அடிப்படையில் விரைந்து கண்டுபிடிக்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் அவர்  உத்தரவிட்டார். அதோடு, சுற்றுலா விசாவில் வந்து விதிமுறை மீறி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் வைத்து அனைத்து மத தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையை  பின்பற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். மேலும், டெல்லி நிஜாமுதீன் மாநாடு குறித்து பேசவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: