கொரோனா தடுப்பு நடவடிக்கையால் செங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் கடும் வேதனை

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், காட்டாங்கொளத்தூர், திருக்கழுக்குன்றம், சித்தாமூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர் ஆகிய ஒன்றியங்களில் அடங்கிய கிராமங்களில் வேளாண் அலுவலர்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 30ம் தேதி வரை கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு இதுவரை பணம் தரவில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவலையொட்டி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 25ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. திருப்போரூர் ஒன்றியத்தில் முள்ளிப்பாக்கம், அனுமந்தபுரம், சிறுங்குன்றம் ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் டோக்கன் வாங்கி காத்திருக்கின்றனர். ஏற்கனவே, தேங்கியுள்ள நெல் மூட்டைகளை மாவட்ட கொள்முதல் மையத்துக்கு கொண்டு சென்ற பிறகே புதிதாக கொள்முதல் செய்ய முடியும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

இதற்கிடையில், மறு உத்தரவு வரும் வரையில் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகாவது தங்களது நெல்லை அரசு வாங்கிக் கொள்ளாவிட்டால் வங்கி மற்றும் தனியாரிடத்தில் அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியாது என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றியங்களில் தர்பூசணி பயிரிட்டு அரசின் ஊரடங்கு உத்தரவால் பல ஆயிரம் ஏக்கர்களில் பயிரிட்ட தர்பூசணியை வாங்க ஆளில்லாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது விளைவித்த நெல்லை அரசு வாங்க மறுப்பது அவர்களின் வேதனையை அதிகரித்துள்ளது.

Related Stories: