ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  மாவட்ட திட்ட இயக்குனர், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரமாக வைத்துக்கொள்ள ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தினார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வகம் அறிவுறுத்தியுள்ளது.அதன்பேரில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிருமி நாசிளி தெளிப்பு, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, முக கவசம், கையுறை அணிவது மற்றும் கை சுத்தமாக வைத்து கொள்வது ஆகிய விழிப்புணர்வுகள், மக்களிடையே ஏற்படுத்தபட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள மதுரமங்கலம், கண்ணந்தாங்கல், சோகண்டி, காந்தூர், திருமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் நடந்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு செய்தார். இதில், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கிராமத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, மண்டல அலுவலர் முரளி, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் நஹீம் பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: