ஆந்திராவில் 23 பேருக்கு கொரோனா உறுதி: தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்படும்...முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

ஐதராபாத்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 201 நாடுகளில் பரவி 34 ஆயிரம் பேரை பலி கொண்டுள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நன்கு வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவில் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு பலி எண்ணிக்கை 3,200யை நெருங்கிவிட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களால், இந்தியாவிலும் கொரோனா பரவி 1,251 பேரை பாதித்துள்ளது. இதுவரை 35 பேர் பலியாகியுள்ளர்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் களம் இறங்கியது. கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பது ஒன்றுதான்  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்பதை வலியுறுத்தினார். அதனால் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்.14ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். அரசு எடுத்துள்ள முடிவின்படி. தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: