டெல்லி பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்த விவகாரம்: கடமை தவறியதாக மாநில உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்...மத்திய அரசு அதிரடி

டெல்லி: சீனாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உருவாகிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா   தாக்குதலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 116 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள்,  சுகாதார பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர். வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertising
Advertising

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்றாட கூலி வேலைகளுக்காக உபி, அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் என்று  பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி வந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நடைபாதையாக குடும்பத்துடன் செல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களை போலீசார் தடுப்பதால், எல்லையில் பெரும்  பிரச்னை ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை விமானங்களை அனுப்பி அழைத்து வரும் மத்திய அரசு, சொந்த நாட்டில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யாதது ஏன்?’ என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தியும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா கடுமையாக மத்திய அரசை விமர்சித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, உபி அரசு 1,000 பஸ்களை நேற்று முன்தினம் இயக்கியது. இதில் இடம் பிடிப்பதற்காக டெல்லி ஆனந்த்  விகார் பஸ் நிலையத்தில் 3 கி.மீ. தூரம் வரையில் மக்கள் வரிசையில் காத்திருந்து ஏறினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுபோன்று பெருமளவில் மக்கள் கூட்டமாக சேர்வதால் வைரஸ் பரவல் அதிகரிக்கும்  என்றும் நிபுணர்களின் எச்சரிக்கை வெளியானது.

இந்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதாக கூறி, டெல்லி அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறையின் முதன்மைச் செயலாளரும் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர். மேலும், டெல்லி உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், சீலம்பூர் சார் கோட்டாட்சியர் ஆகியோர், விளக்கமளிக்கவும், மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்ததுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில், 23 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: