அருப்புக்கோட்டையை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் 106 பேர் மும்பையில் தவிப்பு: அரசு மீட்கக்கோரி வேண்டுகோள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஜவுளி வியாபாரிகள் 106 பேர் ஊர் திரும்ப முடியாமல், மும்பையில் பசி, பட்டினியுடன் பரிதவித்து வருகின்றனர். தங்களை அழைத்து வர தமிழக அரசு உதவ வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி லிங்காபுரம், உடையநாதபுரம், பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், மும்பை உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஜவுளி விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பை தவிர்க்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை, தாராவி லேபர் கேம்ப்பில் தங்கியுள்ள ஜவுளி வியாபாரிகள் 106 பேர், சொந்த ஊருக்கு வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மும்பையில் சிக்கியுள்ள பந்தல்குடி லிங்காபுரம் சுப்புராஜ், முருகன் கூறுகையில், ‘‘எங்களுடன் இருந்தவர்கள் எல்லாம் அவரவர் ஊர்களுக்கு சென்று விட்டனர். நாங்கள் தடை உத்தரவால் ஊர் திரும்ப முடியாமல் மும்பையில் தவிக்கிறோம். எனவே நாங்கள் ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அருப்புக்கோட்டை திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘அவர்களை மீட்க துரிதமாக நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர், தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளேன்’’ என்றார்.

Related Stories: