பிரம்மகுமாரிகள் அமைப்பின் தலைவி தாதி ஜானகி மரணம்

ஜெய்ப்பூர்: பிரம்மகுமாரிகள் அமைப்பின் தலைவி  தாதி ஜானகி தனது 104 வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய ஆன்மீக அமைப்பாக பிரம்மகுமாரிகள் சன்ஸ்தன் விளங்குகிறது. 46 ஆயிரம் பெண்கள் உட்பட 20 லட்சம் பேர் இந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளனர்.  இந்த அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் ராஜ்யோகினி தாதி ஜானகி (104). இவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கடந்த 1916ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்தவர். தனது 21வது வயதில் ஆன்மீக பாதையை நாடினார். கடந்த 1970ம் ஆண்டு மேற்கத்திய நாடுகளுக்கு சென்றார். உலகம் முழுவதும் 140 நாடுகளில் சேவை மையங்களை நிறுவினார். இந்த அமைப்பின் 8 ஆயிரம் மையங்களில் பெண்கள்தான் தலைமை நிர்வாகிகள். தாதி ஜானகியை தூய்மை இந்திய திட்டத்தின் தூதுவராக மத்திய அரசு நியமித்தது.

கடந்த 2 மாதங்களாக இவர் சுவாசப் பிரச்னை மற்றும் வயிற்று கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

மவுன்ட் அபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை 2 மணியளவில் மரணம் அடைந்தார். இவரது இறுதிச் சடங்குகள் பிரம்மகுமாரிகள் தலைமையக வளாகத்தில் உள்ள சாந்தி வனத்தில் நேற்று மாலை நடந்தது.  இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘ராஜ்யோகினி தாதி ஜானகி, சமூகத்துக்காக சுறுசுறுப்புடன் பணியாற்றினார். மற்றவர்களின் வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை கொண்டு வர அவர் உழைத்தார். பெண்களுக்கு அதிகாரம்அளித்தலில் அவரது முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் அவரை பின்பற்றுபவர்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: