கொரோனா முன்னெச்சரிக்கை: முதல்வர் அறிவித்த ரூ.1,000 ரூபாய் ஏப். 2-ல் தொடங்கி ஏப்.15-ம் தேதிக்குள் வழங்கப்படும்...தமிழக அரசு

சென்னை: முதல்வர் அறிவித்த ரூ.1,000 ரூபாயை ஏப்ரல் 2-ம் தேதி முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏப்.15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி முடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். சீனாவின் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க செய்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 650-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியா முழுவதும் சிக்கலில் இருக்கும் இந்த நேரத்தில் அனைத்து மாநில எல்லைகளையும் அந்தந்த மாநில அரசு முழுவதுமாக மூடியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அனைத்து மாநில அரசுகளும் மக்களுக்கு நிதியுதவி அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக மக்களுக்கு நிதியுதவி அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த திட்டம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரையும் விலையின்றி வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரின் காப்பீட்டுத் திட்ட மருத்துவமனைகளுக்கு உத்தரவு

கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க 25% படுக்கைகள் கட்டாயம் ஒதுக்க வேண்டும். கொரோனா சிகிச்சை அறைகள், அனைத்து நவீன வசதிகள் அடங்கியதாக இருக்க வேண்டும். உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சட்டரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: