மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வு மையம்… தமிழகத்தில் 8வது பரிசோதனை மையமாக இது செயல்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை : மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை ஆய்வு செய்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என நேற்று மாலை  மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனிடையே 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் பலியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.இதுக்குறித்து ட்விட்டரில் தகவல் அளித்துள்ள அவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்க உள்ள கொரோனா ஆய்வு மையம் தமிழகத்தில் 8வது பரிசோதனை மையமாக இது செயல்படும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, தேனி, திருநெல்வேலி, சேலம், திருவாரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் கொரோனாவைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ள நிலையில் தற்போது 8வதாக மதுரையில் ஓர் ஆய்வு மையம் அமைந்துள்ளது.

Related Stories: