தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23-ஆக உயர்வு: தடுப்பு பணிகளுக்கு உதவ ரூ.3 கோடி நிதி என அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

சென்னை:  தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்குவதாக, எம்.பி.யும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார். தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறியதாவது; கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான கருவிகள், நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதன்பொருட்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் தேவையை பொறுத்து அடுத்தத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: