ஊட்டியில் விபரீத சம்பவம் ‘கொரோனா வருது’ என கிண்டல் தொழிலாளி குத்திக்கொலை: பேக்கரி ஊழியர் கைது

ஊட்டி: ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி (40). இவர், ஊட்டி மார்க்கெட்டில் பாரம் தூக்கும் தொழிலாளியாக இருந்துள்ளார். மேலும், மார்க்கெட் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆவார்.   இவரது நண்பர் நாராயணன்குட்டி, ஊட்டி பி1 காவல் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் சிறிய மெஸ் வைத்துள்ளார். அங்கு மீன் சாப்பிடுவதற்காக ஜோதிமணி மற்றும் அவரது நண்பர்கள் கடைக்குள் சென்றனர்.

அந்த கடைக்கு தேவதாஸ் (40) என்பவர் வந்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் அருகே உள்ள பேக்கரியில் வேலை செய்து பார்க்கிறார். அப்போது, உரிமையாளர் நாராயணன்குட்டியிடம் உணவு சாப்பிடும்போது தேவதாஸ், ‘‘நேற்றுதான் கேரளாவில் இருந்து வந்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.  அருகில் இருந்த ஜோதிமணி, ‘சற்று தள்ளி உட்கார்ந்துகோங்க’ என்று அறிவுறுத்தி இருக்கிறார். உடனே, தேவதாஸ் ஏன் அப்படி சொல்றீங்க என கேட்டுள்ளார். அதற்கு ஜோதிமணி, ‘கேரளாவுக்கு போய்ட்டு வந்ததால் உங்களுக்கு கொரோனா வந்திருக்கும்’ என்று எதார்த்தமாக கூறி இருக்கிறார். யாரை பார்த்து கொரோனா வந்திருக்கு என்று சொல்றீங்க என தேவதாஸ் கேட்டார்.

இதனால், சுமார் 10 நிமிடம் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தேவதாஸ், கடையில் வெங்காயம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து, ‘உங்கள் ஊரில் கொரோனா பரவாதா? எனக்கூறி ஜோதிமணியை கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். கத்திக் குத்தில் நிலைகுலைந்த ஜோதிமணி பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த ஜோதிமணியை அவரது நண்பர்கள் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜோதிமணி இறந்துவிட்டதாக கூறினர்.   இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி பி1 போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேவதாசை கைது செய்து,  சிறையில் அடைத்தனர். முன்னதாக, கொலை செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்கெட் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கலைந்துச் சென்றனர்.

Related Stories: