கொரோனாவால் மலேசியா, ஐரோப்பாவில் இருந்து சென்னை வந்த 104 பேர் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அனுமதி: வரவேற்க இருந்த உறவினர்கள் ஏமாற்றம்

சென்னை: மலேசியாவில் இருந்து சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்ட 104 பேர், சிறப்பு பஸ்கள் மூலம் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா திரும்ப விரும்பிய மலேசிய, ஐரோப்பியாவில் சிக்கிய 113 பேரை இந்தியா அழைத்துவர சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.அவர்களுக்கு விமான ஓடுதளத்திலேயே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களில் 104 பேரை, இந்திய விமானப்படையின் சிறப்பு பஸ்களில் ஏற்றி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை வளாகத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு 14 நாட்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என கூறப்படுகிறது. மீதமுள்ள 9 பேரை, 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் இந்த 113 பேரும் சென்னை வருவதை அறிந்த அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். ஆனால் மருத்துவ குழுவினரும், பாதுகாப்பு அதிகாரிகளும், இந்திய விமான படை போலீசாரும், அவர்களை சந்திக்க அனுமதி மறுத்து விட்டனர்.மேலும் அவர்களை விமான ஓடுதளம் அருகில் இருந்தே இந்திய விமான படை சிறப்பு பஸ்களில் ஏற்றி, வேறு வழியாக வெளியே அழைத்து சென்றதால், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் நள்ளிரவில் இருந்து காத்திருந்து, இந்திய விமான படை பஸ்கள் வெளியே வந்தபோது, ஒரு சிலர், தங்கள் பிள்ளைகளை பார்த்து கையை அசைத்தது மனதை உருக்குவதாக இருந்தது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம், செல்போன் மூலம் மட்டுமே பேச முடிந்தது. இந்த 113 பேரும் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா உள்பட பல மாநிலங்களை சோ்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

Related Stories: