குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரையில் பேரணி நடத்திய 1,500 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விதிமீறி, மதுரையில்  பேரணி நடத்திய 1,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் முஸ்லிம்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மதுரை மகபூப்பாளையத்தில் கடந்த பிப்.14ல் காத்திருப்பு போராட்டம் துவக்கப்பட்டது. இந்த போராட்டம் 36வது நாளாக நேற்று முன்தினம் இங்குள்ள ஜின்னா திடலில் நடந்தது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் தீவிரம் காட்டி வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் இந்த காத்திருப்பு போராட்டம் நேற்று முதல் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக அனைத்து கட்சி இயக்கங்கள், அனைத்து ஜமாத்கள் சார்பில் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் இருந்து மதுரை ரயில் நிலையம் நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் விதிமீறி பேரணி நடத்தியதாக ஜமாத் தலைவர் லியாகத் அலி, ஒருங்கிணைப்பாளர் நிஜாம் அலி கான், வக்கீல் ஹென்றி டிபேன் உள்பட 800 ஆண்கள், 700 பெண்கள் என 1,500 பேர் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: