திருவாரூரில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தியாகராஜ சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை

திருவாரூர் :  கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய நேற்று முதல் தடை  விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் அதிகமாக கூடும் கோயில்களுக்கும் பக்தர்கள் உள்ளே செல்ல நேற்று காலை முதல் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில் மற்றும் பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருத்தனி முருகன் கோயில், பழனி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஷ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மற்றும் சுசிந்தரம் தாணுமலையான் கோயில் என மொத்தம் 14 கோயில்களில் நேற்று காலை 8 மணி முதல் மறு உத்தரவு வரும் வரையில் பக்தர்களை உள்ளே அனுமதிக்க கூடாது எனவும், இருப்பினும் ஆகம விதிப்படி வழக்கமான பூஜைகள் செய்யலாம் எனவும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலும் இந்த உத்தரவு படி நேற்று காலை முதல் பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் கோயிலின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என அனைத்து கோபுர வாசல்களும் பூட்டப்பட்டன. இருப்பினும் ஆகம விதிப்படி கோயிலின் மூலவரான வன்மீகநாதர், உற்சவரான தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் உட்பட அனைத்து சன்னதிகளிலும் சிவாச்சாரியார்கள் மூலம் பூஜைகள் நடைபெற்றன. மேலும் இக்கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டில் இந்த விழாவினையொட்டி கோயிலின் மூலவரான வன்மீக நாதர் சன்னதி எதிரே 2ம் பிரகாரத்தில் உள்ள 54 அடி உயர கொடிமரத்தில் கடந்த 11ம் தேதி சிவாச்சாரியார்கள் மூலம் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் மே மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது தினந்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முதல் இந்த சுவாமி புறப்பாடுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: