7 பேர் விடுதலையில் தாமதம் ஏன்?: அமைச்சர் விளக்கம்

பேரவையில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கேயம் தனியரசு(தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை) பேசியதாவது:  முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இதுவரை அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அமைச்சர் சி.வி.சண்முகம்: 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுக்க கவர்னருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னரின் செயலாளர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பல்நோக்கு விசாரணை அமைப்பு (சிபிஐ மத்திய உளவுத்துறை, நுண்ணறிவு பிரிவு) சதி திட்டஙகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

அதற்கான விசாரணை இன்னும் முடியவில்லை. அந்த அமைப்பு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, அதன் அடிப்படையில் கவர்னர் முடிவு எடுப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை நம் அனைவருக்குமே இருக்கிறது. தனியரசு: அவர்கள் விடுதலையில் தமிழக அரசு முயற்சி எடுக்கிறது. தற்போது விடுதலை தள்ளிப்போவதால் அவர்கள் 7 பேரை பரோலில் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் சி.வி.சண்முகம்: பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பரோல் வழங்கியது அதிமுக அரசு தான். பரோல் விதி முறைகளின்படியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி, அவர்கள் பரோலுக்கு விண்ணப்பித்தால், ஆய்வு செய்து பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: