மாநில சம்மேளனம் அறிவிப்பு தமிழகத்தில் லாரிகள் நாளை ஓடாது

நாமக்கல்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. நாளை (22ம் தேதி) இந்தியா முழுவதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநிலங்களில் பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் லாரி உரிமையாளர்களுக்கு லோடு கிடைக்கவில்லை. பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி, தமிழகத்தில் நாளை ஒரு நாள் லாரிகள் இயக்கப்படாது.  மாநிலம் முழுவதும் உள்ள 4 லட்சம் லாரிகளும் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது..

Related Stories: