பொன்னமராவதி பகுதியில் மானிய விலையில் வைக்கோல் வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

பொன்னமராவதி: மானிய விலையில் வைக்கோல் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பகுதியில் நெல்லை விட வைக்கோலுக்கே அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொன்னமராவதி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாகவே சரிவர மழை பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் நெல் நடவுப்பணி நடக்கவில்லை. ஒரு சில விவசாயிகள் மட்டும் போர்வெல் அமைத்து மின் மோட்டார் வைத்து நெல் நடவு செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வளர்க்கும் மாடுகளுக்கு முக்கிய தீவனமாக கருதப்படும் வைக்கோல் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் இப்பகுதியில் இருந்து வைக்கோல் போர் போராக வெளியூர்களுக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.

ஆனால் இப்போது இப்பகுதியில் ஒரு சிலர் நெல் நடவு செய்து வைத்திருந்த வயலில் மீதமான வைக்கோலை வெளியூர்களில் இருந்து வந்து ஒரு கட்டு வைக்கோல் ரூ.300முதல் 500 வரை வாங்கி செல்கின்றனர். ஒரு ஏக்கர் நெல் நடவு செய்து நல்ல மகசூல் கிடைத்தால் சுமார் ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நெல் விற்பனையாகும். அதேபோல் வைக்கோல் ரூ.30 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆகும். இவ்வாறு இப்பகுதியில் வைக்கோலின் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

இதனால் இப்பகுதியில் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கின்றது என்று சந்தோஷப்பட்டாலும் மழையினை நம்பி எந்த விவசாயியும் நெல்நடவு செய்யாத நிலையினால் அதிக விலைகொடுத்தே வைக்கோல் வாங்க வேண்டிய நிலையுள்ளது. இப்போது பொன்னமராவதி பகுதியில் மாடு வளர்ப்போர் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மேலூர் போன்ற பகுதிகளில் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலையுள்ளது. எனவே முன்பு கொடுத்தது போல அரசு கால்நடை மருத்துவமனைகளில் மானிய விலையில் வைக்ககோல் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: