பழநி மலைக்கோயிலில் தர்ணா செய்த சீனப்பெண் விசா முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்தாரா?

பழநி: பழநி கோயிலில் தர்ணாவில் ஈடுபட்ட சீனப்பெண்ணின் விசா காலாவதியாகி விட்டதாக பரவும் வாட்ஸ் அப் தகவல் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தீவிர பரிசோதனைக்கு பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், பழநி மலைக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு சுற்றுலா சென்று விட்டு, தனது தோழியான மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஸ்வினி என்பவருடன், சீன நாட்டைச் சேர்ந்த சோசான் (35) என்பவர் நேற்று முன்தினம் பழநி மலைக்கோயிலுக்கு வந்தார். சீனப்பெண் என்றதும் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. உடன் வந்த அவரது தோழியான அஸ்வினி மட்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.

இதில் கோபமடைந்த சோசான், வின்ச் நிலையம் எதிரில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இரவு நீண்ட நேரம் ஆனதால் அடிவாரத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கி விட்டு நேற்று கோவைக்கு சென்றுவிட்டார். இவரின் விசா வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. அந்த விசாவில் இப்பெண்ணின் பெயர் சோசான் (34); சீன நாட்டின் சான்சி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. கோவையில் உள்ள ஒரு யோகா மையத்தில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு 2019, ஜூலை மாதத்தில் வழங்கப்பட்ட விசாவில், கடந்த ஜனவரி 7ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மார்ச் ஆகிவிட்டதால் விசா காலாவதியாகியும் இந்திய நாட்டில் சுற்றித்திரிகிறாரா, விசா நீட்டிப்பு செய்யப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோல் விசா காலாவதியான வெளிநாட்டவர் யாரேனும் உள்ளனரா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: