தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பை உறுதிப்படுத்த காங். தலைவர்களை சந்திக்க அனுமதிக்கக் கூடாது: கர்நாடக காவல் ஜெனரலுக்கு 22 எம்எல்ஏக்கள் கடிதம்

பெங்களூரு: தங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், தங்களுக்கு  பாதுகாப்பை அளிக்கக்கோரி மத்தியப்பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் கர்நாடக காவல் ஜெனரலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய பிரதேச அரசியல் குழப்பம்:

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியை சேர்ந்த 22 அதிருப்தி எம்எல்ஏ.க்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் கட்சியில் இருந்து விலகினர். இதனால், கமல்நாத் அரசு   பெரும்பான்மையை இழந்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 6 பேர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற 16 எம்எல்ஏ.க்களின் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய கவர்னர் லால்ஜி டாண்டன் கடந்த 16ம் தேதி பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், சபாநாயகர் பிரஜாபதி,   கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி பேரவை கூட்டத்தை மார்ச் 26ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

பாஜக வழக்கு:

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து, இம்மாநில பாஜ.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், 9 பாஜ எம்எல்ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரவையை வரும் 26ம் தேதி   வரை ஒத்திவைத்த சபாநாயகரின் முடிவு, கவர்னரின் உத்தரவை மீறுவதாக உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கோரும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகானின் மனுவுக்கு   கமல்நாத் அரசு புதன்கிழமை (இன்று) பதில் அளிக்க வேண்டும். இதற்காக சட்டப்பேரவை செயலாளர், மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது,’ என்றனர். இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும்  வருகிறது.

 

திக்விஜய் சிங் கைது:

இதற்கிடையே, பெங்களூரில் உள்ள ரமாடா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை பார்த்து பேச மத்திப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நேரில் வந்தார். ஆனால், எம்எல்ஏக்களை பார்க்க போலீசார்   அனுமதி மறுத்ததால் திக்விஜய் சிங் தனது ஆதரவாளர்களுடன் ரமாடா ஹோட்டல் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

எம்எல்ஏக்கள் கடிதம்:

இந்நிலையில், பெங்களூரில் ஹோட்டலில் தங்கியுள்ள 22 மத்தியப்பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கர்நாடக காவல்துறை ஜெனரலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், தங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், தங்களுக்கு  பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்த காங்கிரஸ் தலைவரும் / உறுப்பினரும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று கடித்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: