கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த மத்திய அரசு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று?

*  வீட்டை முற்றுகையிட்ட கிராமத்தினர்

*  ஊரைவிட்டு வெளியேறும்படி கோஷம்

நாகர்கோவில்: கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த மத்திய அரசு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக தகவல் பரவியது. இதனால், நள்ளிரவில் கிராமமக்கள் திரண்டு வந்து, அவரை வெளியேறுமாறு கோஷமிட்டனர். போலீசார், டாக்டர்கள் வந்து, சாதாரண காய்ச்சல் என உறுதி செய்தபிறகே கலைந்து சென்றனர்.  கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கேரள எல்லையான குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒருவர் கத்தார் நாட்டில் இருந்து வந்தவர் ஆவார். மற்றொருவர் கேரளா சென்று வந்தவர் ஆவார். இவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள், திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர், கேரளாவில் மத்திய அரசின் சுங்கத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்களது கிராமத்தில் வசித்து வருகிறார்கள். திடீர் காய்ச்சல் காரணமாக விடுமுறையில் அந்த அதிகாரி நேற்று முன்தினம் மாலை ஊருக்கு வந்தார். அப்போது, அவர் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தார். இந்த தகவல் ஊர் முழுவதும் பரவியதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தங்களது வீடுகளை பூட்டி விட்டு, குழந்தைகளுடன் உறவினர் வீடுகளுக்கு சென்றனர். பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிந்தவாறு அவரது வீட்டின் அருகில் நின்று, ஊரை விட்டு செல்லுமாறு கோஷம் எழுப்பினர். இதையடுத்து கன்னியாகுமரி போலீசார், மாவட்ட மருத்துவ அதிகாரிகளுடன் வந்தனர். பின்னர், அந்த அதிகாரியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே கேரளாவில் பரிசோதனை செய்து, தான் பெற்று இருந்த மருந்துகளை காண்பித்தார். உடனடியாக கேரளாவில் உள்ள மருத்துவ குழுவினரை தொடர்பு கொண்டு மருத்துவக்குழுவினர் பேசினர்.

அப்போது, ‘‘அந்த அதிகாரிக்கு முழு பரிசோதனை நடத்தி முடித்துவிட்டோம். அவருக்கு சாதாரண காய்ச்சல்தான் உள்ளது. 2, 3 நாட்களில் குணம் அடைந்து விடுவார்’’ என்று தெரிவித்தனர்.  இந்த தகவலை பொதுமக்களிடம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் நள்ளிரவு 1 மணி வரை மக்கள் தூங்காமல் வீதிகளில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் கலைந்து சென்றபின்னரே பரபரப்பு அடங்கியது. பெண் டாக்டர்: இதேபோல், நேற்று முன்தினம் பெண் டாக்டர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் அவர், சமீபத்தில் கேரளாவுக்கும் சென்று வந்திருக்கிறார். அவருக்கு காய்ச்சலுடன், சளியும் இருந்ததால், சந்தேகத்தின்பேரில் சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடைக்கானலில் வெளிநாட்டு பயணிகள்  20 பேர் அதிரடி வெளியேற்றம்

கொரோனா பீதி எதிரொலியாக சுற்றுலாத்தலங்களை மூட உத்தரவிட்டுள்ளதால், கொடைக்கானல் வெறிச்சோடி காணப்படுகிறது. வட்டக்கானலில் தங்கி உள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரையும், உடனடியாக வெளியேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மாலை வருவாய்துறை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் வட்டக்கானல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள சுமார் 20 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை, உடனடியாக அவர்களது நாட்டுக்கு செல்ல உத்தரவிட்டனர். இங்கு தங்கியிருந்த அமெரிக்க சுற்றுலாப்பயணி வின்சென்ட்டுக்கு, அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளார். இன்று முதல் கொடைக்கானலில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கைதிகளுக்கு முகக்கவசம்: தமிழக சிறைத்துறையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து புழல், வேலூர், புதுக்கோட்டை, கோவை, பாளையங்கோட்டை ஆகிய 5 இடங்களில் பெட்ரோல் பங்குகளை கடந்த ஓராண்டாக நடத்தி வருகின்றனர். இங்கு பணியாற்றும் கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: