கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள், மதுபான பார்கள் மூடல் எதிரொலி : ஒரே நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் முடக்கம்

சென்னை : தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பல்பொருள் அங்காடியில் தொடங்கி சினிமா மதுபான பார்கள் வரை அனைத்து வகை வர்த்தகமும் முடங்கியுள்ளது. ஒரே நாளில் பல ஆயிரம் கோடி வியாபாரம் தடைப்பட்டதால் பெரும் முதலாளிகள் முதல் தினக்கூலி தொழிலாளி வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.மெல்ல மெல்ல தமிழகத்திற்குள்ளும் ஊடுருவிவிட்ட கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலமெங்கும் கல்வி நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. 960 திரையரங்குகளை மார்ச் 31ம் வரை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன.சினிமா படப்பிடிப்பு புதுப்பட வெளியீடுகளும் நிறுத்தப்பட்டதால் தினமும் 50 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசு உத்தரவை அடுத்து 2,500க்கும் அதிகமான டாஸ்மாக் பார்கள், நட்சத்திர விடுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறு, குறு தொழில்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மட்டுமின்றி சென்னை கோயம்பேடு காய்கனி சந்தை, ஈரோடு ஜவுளி சந்தை உள்ளிட்ட முக்கிய சந்தைகளும் வெறிச்சோடின.தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டுமென்ற அறிவுறுத்தலால் சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் இல்லை. சீனா, இத்தாலியை உலுக்கியிருக்கும் கொரோனா, தற்போது தமிழகத்தில் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் முடங்கியுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தொழில்துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.

Related Stories: