கொரோனா பீதி எதிரொலி பக்தர்கள் கூட்டமின்றி ராமேஸ்வரம் ‘வெறிச்’: கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சுகாதாரத்துறையால் கோயில் பிரகாரங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், நாள்தோறும் ராமேஸ்வரம் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதுமட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதும் வழக்கமாக உள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவும் தப்பவில்லை.

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அடையாளம் காணப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்திற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் நாள்தோறும் வந்து செல்வதால், அதிகளவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கூடும் இடங்களில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என தன்னார்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதிகளவில் பக்தர்கள் செல்லும் ராமநாதசுவாமி கோயிலிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் பக்தர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று சுகாதாரத்துறை பணியாளர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, கோயில் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்தனர். கோயிலுக்குள் பக்தர்கள் செல்லும் பிரகாரங்கள், சுவாமி, அம்பாள் மற்றும் சுற்றுச்சன்னதிகள், தீர்த்தமாடும் பகுதிகள் உட்பட கோயில் முழுவதும்  மருந்து தெளிப்பான் கருவி மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. டாக்டர் அருள் தலைமையில் 8 சுகாதாரத்துறை ஊழியர்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். நாள்தோறும் தடுப்பு மருந்து தெளிக்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் கோயில் நுழைவாயில் முன்பு தற்காலிக கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடலின் வெப்பநிலை குறித்து சோதனை செய்யப்பட்டது. கோயில் இணை கமிஷனர் கல்யாணி, கொரோனா வைரஸ் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியை பார்வையிட்டார்.

Related Stories: