மதுரையில் ராணி மங்கம்மாள் உருவாக்கிய 350 ஆண்டு பழமையான தமுக்கம் மைதானம் இடிப்பு

மதுரை: மதுரையில் ராணி மங்கம்மாள் உருவாக்கி, வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும், 350 ஆண்டுகள் பழமையான தமுக்கம் மைதானத்தை, வணிக வளாகம் கட்டும் பணிக்காக இடிக்கும் பணி நேற்று துவங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தொடர்ந்து மதுரையின் பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானத்திலுள்ள சங்கரதாஸ் சுவாமி கலையரங்கத்தை இடித்து புதிய வடிவில் கட்டவும், ஷாப்பிங் மால் கட்டவும் ரூ.45 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மைதானத்தை மூட மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக இங்கு சித்திரை திருவிழாவை முன்னிட்டு அரசு நடத்தும் சித்திரை பொருட்காட்சி 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

350 ஆண்டு பாரம்பரியமான தமுக்கம் தைானத்தை மூட கடும் எதிர்ப்பு உருவானது. அதையும் மீறி அவசர அவசரமாக மைதானத்தை மூடி, தோண்டும் பணியும், கலையரங்கத்தை இடிக்கும் பணியும் நேற்று துவங்கியது. இந்த மைதானம் மதுரையின் முக்கிய அடையாளமாகும். இதன் வரலாற்று சிறப்பு  பின்னணி வருமாறு: மதுரையை 350 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி புரிந்தவர் ராணி மங்கம்மாள். இவர், மதுரையை ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் கடைசியாக ஆண்ட ராணி. இவரது அரண்மனையே தற்போது காந்தி மியூசியமாக உள்ளது. 1670ம் ஆண்டு இந்த அரண்மனை கட்டியபோது, அதன் அருகில் யானை, குதிரைகளின் ஓட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடைபெறும் மைதானமாக தமுக்கத்தை உருவாக்கினார். வீர விளையாட்டுகள் நடக்கும்போது, அரண்மனை மாடத்தில் இருந்து ராணி கண்டுகளிப்பார். ஆங்கிலேயர் ஆட்சி அமைந்ததும்  மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அன்றைக்கு இருந்த சிறையில் ராணி அடைக்கப்பட்டார்.  அரண்மனை வளாகம் கலெக்டர் அலுவலகமாக மாற்றப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி முடிந்ததும், 1959ல் இந்த அரண்மனை காந்தி மியூசியமானது. அந்த அரண்மனை தோற்றம் இன்றுவரை மாறாமல் அப்படியே உள்ளது. 1981ல் மதுரையில் உலக தமிழ் மாநாடு நடைபெற்றபோது, தமுக்கம் மைதானம் புதுப்பொலிவு பெற்றது. மைதானத்தின் மொத்த பரப்பளவு 10 ஏக்கர். அதில் 4 ஏக்கரில் மட்டும் கலையரங்கம் மற்றும் தோரண வாயில்கள் கட்டி பொலிவூட்டப்பட்டது. இதன் முழு பொறுப்பும் மாநகராட்சி சார்ந்தது.

எனவே மாநாடு, பெரிய விழாக்கள், திருமணங்கள், விளையாட்டு போட்டிகள், பொருட்காட்சிகள் இங்கு நடைபெற்று வந்தன. மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் எந்த நேரமும் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்ல வசதியாக இருந்தது. சித்திரை திருவிழாவில் பக்தர்கள் இங்கு வந்து ஓய்வெடுப்பார்கள். புதிய திட்டத்தின் மூலம் மைதானத்தின் பெரும் பகுதி கட்டிடமாக வாய்ப்புள்ளது.

Related Stories: