கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: வேலூர் கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

வேலூர்: உலககெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பீதி இந்தியாவை தேசிய பேரிடராக அறிவிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கண்காணிப்பிலும், சிகிச்சையிலும் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்துள்ளது. தினமும் பல்லாயிரக்கணகானவர்கள் வந்து தரிசனம் செய்யும் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடியுள்ளது.

அதேபோல் வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயில், அமிர்தி வனச்சரணாலயம், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை உட்பட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் அனைத்து இடங்களும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் வேலூர் நகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளின் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது. வேலூர் கோட்டையை பொறுத்தவரை வார விடுமுறை நாட்களில் சாதாரணமாக 50 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் காணப்படும். கொரோனா அச்சம் காரணமாக இது நூற்றுக்கணக்கில் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, ‘கொரோனா அச்சத்தால் நிச்சயம் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துதான் போயுள்ளது. அதேநேரத்தில் வழிபாட்டுத்தலம், சுற்றுலா தலம் என வரும் சுற்றுலா பயணிகள் முழுமையாக நவீன கருவி மூலம் பரிசோதிக்கப்படுகின்றனர்’என்கின்றனர்.

Related Stories: