ஆட்டிப்படைக்கும் கொரோனா பீதியால் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்களின் நெற்றியில் அர்ச்சகர்கள் விபூதி, குங்குமம் வைக்கத் தடை

புதுச்சேரி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் நெற்றியில் அர்ச்சகர்கள் விபூதி, குங்குமம் வைக்கக் கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் திருப்பதி திருமலை கோவில், பழனி ஆண்டவர் கோயில் உள்பட பல கோயில் நிர்வாகிகள் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் கோவிலுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு அடுத்த 28 நாட்களுக்கு வெளிநாட்டவர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் வருவதை தவிர்க்குமாறும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் அதாவது சளி இருமல் காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்குள் வருவதை தவிர்க்கவும் என்று கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதனோடு கோயிலுக்கு வரும் பக்தர்களின் நெற்றியில் அர்ச்சகர்கள் விபூதி, குங்குமம் வைக்கக் கூடாது என்றும் கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: