ம.பி காங்கிரஸ் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை; சட்டப்பேரவை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...பெரும் மூச்சு விட்ட முதல்வர் கமல்நாத்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்களாக இருந்த 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்வதாக கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர். ராஜினாமா கடிதம் அளித்த அடுத்த நாள்  ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.வில் இணைந்தார். தொடர்ந்து, 6 அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்யக் கோரி, ஆளுநருக்கு முதல்வர் கமல்நாத் பரிந்துரை செய்தார். மேலும் பா.ஜ பிடியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விடுவிப்பதை உறுதி  செய்ய வேண்டும் எனவும், இன்று சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயார் என்றும் கமல்நாத் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, முதல்வர் கமல்நாத்துக்கு, ஆளுநர் லால்ஜி டாண்டன்  அனுப்பியுள்ள கடிதத்தில், 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் ஊடகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 10ம் தேதி அன்று, எனக்கும் அவர்கள் தனியாக கடிதம் அனுப்பினர். அரசியல் சாசன சட்டப்பிரிவு 174 மற்றும் 175(2)ன்படி ம.பி சட்டப்பேரவையை இன்று கூட்ட எனக்கு  அதிகாரம் உள்ளது. எனது உரையுடன் சட்டப்பேரவை காலை 11 மணிக்கு தொடங்கும். அது முடிந்ததும் செய்ய வேண்டிய ஒரே வேலை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது. வாக்குகள் அடிப்படையில் நடக்கும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை  வீடியோ எடுக்க வேண்டும். இந்தப் பணி இன்றுக்குள் முடிய வேண்டும். எக்காரணம் கொண்டும், இதை ஒத்திவைக்கவோ, தாமதிக்கவோ, நிறுத்திவைக்கவோ கூடாது. இது தொடர்பாக எதிர்க்கட்சியான பா.ஜ.வும் மனு கொடுத்துள்ளது.  ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில அரசு தேவையற்ற அழுத்தம் கொடுப்பதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதல்கட்ட ஆய்வில், உங்கள் அரசு நம்பிக்கையை இழந்து சிறுபான்மை அரசாக உள்ளது என நம்புகிறேன். ஜனநாயக  மதிப்பை காப்பாற்ற, சட்டப்பேரவையில் இன்று எனது உரைக்குப்பின் நீங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர் லால்ஜி டாண்டன், அனைவரும் அரசியலமைப்பின் கீழ் விதிகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மத்தியப்  பிரதேசம் கண்ணியம் பாதுகாக்கப்படும் என்று சட்டமன்ற நடவடிக்கைகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் லால்ஜி டாண்டன் பேரவையில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து மத்திய பிரதேச சட்டப்பேரவை மார்ச் 26-ம்  தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று முதல்வர் கமல்நாத் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற நிலையில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: