அந்தரத்தில் உடைந்து தொங்கும் தானியங்கி போக்குவரத்து சிக்னல்: சாலை விபத்து அபாயம் வேடிக்கை பார்க்கும் காவல்துறை அதிகாரிகள்

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து தானியங்கி சிக்னல்கள் அந்தரத்தில் உடைந்து தொங்குகிறது. சாலை விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். கோவை மாநகரில் அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ேராடு, பொள்ளாச்சி ரோடு, சத்தி ரோடு, பாலக்காடு ரோடு, சிறுவாணி ரோடு, தடாகம் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளின் 51 சந்திப்புகளில் போக்குவரத்து தானியங்கி சிக்னல் உள்ளது. இவற்றை, மாநகர போக்குவரத்து காவல்அதிகாரிகள் கண்காணிப்பில் தனியார் அமைப்பினர் பராமரித்து வந்தனர். இந்த சிக்னல்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள மின்கம்பம் மூலம் மின்இணைப்பு பெறப்பட்டுள்ளது. மின்கட்டணத்தையும் தனியார் அமைப்பினரே செலுத்தி வந்தனர்.

ஆனால், சமீப காலமாக தனியார் அமைப்பினர், இந்த சிக்னல் பராமரிப்பை கைவிட்டு விட்டனர். காரணம், ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது, அதனால் இனி எங்களால் பராமரிக்க இயலாது என கைவிரித்து விட்டனர். இதன்காரணமாக, நகரில் பெரும்பாலான இடங்களில் இந்த சிக்னல்கள் பழுதடைந்து விட்டன. பல இடங்களில் உடைந்து தொங்குகிறது. குறிப்பாக, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் சிக்னல் மொத்தமாக பழுதாகி,  பயன்பாட்டில் இருந்தே தூக்கி வீசப்பட்டது. ராஜ வீதி, பெரிய கடை வீதி, வின்சென்ட் ரோடு சந்திப்பு, லங்கா கார்னர், அரசு மருத்துவமனை, சுங்கம், ராமநாதபுரம் சிக்னல் ஆகியவையும் பழுதடைந்து கிடக்கிறது. ஆத்துப்பாலம்-கரும்புக்கடை சிக்னல் உடைந்து,  கம்பத்துடன் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

பல முக்கிய சந்திப்புகளில் இந்த சிக்னல்கள் இயங்குவதில்லை. இதன்காரணமாக, வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, சிக்னல் சந்திப்பில், முட்டி மோதும் நிலை ஏற்படுகிறது. பல இடங்களில் வாகன ஓட்டிகள், தகராறு-வாக்குவாதம் செய்வதும் வாடிக்கையாகி விட்டது. போக்குவரத்து போலீசார், பல சிக்னல் சந்திப்புகளில் பணியில் இருப்பதில்லை. பந்தோபஸ்து டியூட்டி எனக்கூறி எஸ்கேப் ஆகி விடுகின்றனர். தானியங்கி சிக்னல் மட்டுமின்றி, பல இடங்களில் இந்த சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களும் பழுதாகி விட்டது. இதனால், வாகன ஓட்டிகளின் விதிமீறல்களை வீடியோவில் ஆதாரப்பூர்வமாக பதிவுசெய்வதிலும் இழுபறி நீடிக்கிறது. ஒருசில சிக்னல் இயங்கினாலும், அதில் நேர நடைமுறையில் முரண்பாடு இருக்கிறது.  பெயரளவிற்கு உள்ள இந்த சிக்னல்களை மதிக்காமல், வாகன ஓட்டிகள் பலர் சர்... சர்...ரென பறக்கின்றனர்.

விதிமீறி செல்லும் வாகனங்களை  போலீசார்  உடனுக்குடன் மடக்கி பிடிப்பதில்லை. இயங்காத சிக்னல்களை மீறிச்செல்லும் வாகனங்களை  எப்படி  ஆதாரத்துடன் பிடிப்பது? எப்படி நடவடிக்கை எடுப்பது? என போலீசார்   குழப்பத்தில் உள்ளனர். இந்த விதி மீறல் காரணமாக நகரில், பல சந்திப்புகளில்   வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டாக கோவை நகரில் சிக்னல் சீரமைப்பு திட்டம்  முடங்கிக்கிடக்கிறது. சீரமைப்பு பணிக்கான நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள்  முடங்கி விட்டதாக கூறப்படுகிறது. கோவை மாநகரில் தினமும் 1,200 முதல் 1,500  வாகனங்களுக்கு போலீசார் ‘உடனடி அபராதம்’ (ஸ்பார்ட் பைன்) விதிக்கின்றனர்.  தினமும் சுமார் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தும், சிக்னல்களை  சீரமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள்  அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுபற்றி கோவை மாநகர போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:  மாநகரில் 51 சிக்னல்களை பராமரிக்க 4.5 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதுதவிர,  கூடுதலாக சில இடங்களில் சிக்னல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 136 சந்திப்புகளில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டியுள்ளது. சிக்னல் சீரமைக்கவும், புதிதாக அமைக்கவும் தேவையான நிதி அரசிடமிருந்து வந்தால், இப்பணிகளை விரைந்து செய்ய முடியும். ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின்கீழ் (ஐ.டி.எம்.எஸ்) நிதி கேட்டிருக்கிறோம். இதில், நிதி கிடைத்தால்தான் போக்குவரத்து சிக்னல்களை சரிசெய்ய முடியும். கோவை மாநகராட்சி நிர்வாகத்திடமும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் நிதி கேட்டோம். ஆனால், பதில் இல்லை.

மாநகரில் பெரும்பாலான சிக்னல்கள், மின்இணைப்பு மூலமாகவே இயங்கி வருகிறது. சோலார் திட்டத்தில் சிக்னல்கள் இயக்கப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் சிக்னல்களின் முன் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கினால், அவர்கள் மூலமாக சிக்னல்களை பராமரிக்க முடியும். இல்லாவிட்டால் அதற்கான தொகையை பெற முடியும். இந்த திட்டமும் நிறைவேறாத நிலையில் இருக்கிறது. பெரும்தொகை செலவுசெய்து இந்த சிக்னல்களை சீரமைக்க தனியார் அமைப்பினர் முன்வரவில்லை. செயல்படாத சிக்னல்கள் முன் போக்குவரத்து போலீசாரை நியமித்து, வாகன விதிமீறலை கண்காணித்து வருகிறோம். சிக்னல் இயங்காவிட்டாலும் விதிமீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. வாகனங்களை நிறுத்தாமல் இயக்குவது, ஸ்டாப் லைன் கடந்து நிறுத்துவது உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணித்து வழக்கு பதிவு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கோவையை சேர்ந்த நுகர்வோர் அமைப்பினர் கூறியதாவது: இயங்காத சிக்னல்களை கவனிக்க போலீசார் வருவதில்லை. ஆனால், அதே பகுதியில் மறைவாக நின்று விதிமுறை மீறல் என வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் வசூலிக்கிறார்கள். ஓவர் ஸ்பீடு, செல்போன் பேச்சு, நம்பர் பிளேட் குளறுபடி என ஏதாவது ஒரு காரணத்ைத சொல்லி, அபராதம் வசூலிப்பதை இலக்காக கொண்டுள்ளனர். சிக்னல்களின் முன், ஸ்டாப் லைன் தெரிவதில்லை. பிரீ லெப்ட் தெரிவதில்லை. ஆனால், இதை மீறி விட்டதாக கூறி போலீசார் வாகனங்களை மடக்கி பிடிக்கிறார்கள். இயங்காத சிக்னல்களை வைத்துக்கொண்டு, அபாரதம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* சோலார் பேனலும் போச்சு..!

நகரில் போக்குவரத்து  தானியங்கி சிக்னல்களுக்கு, மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பித்து, மாற்று ஏற்பாடாக,  கடந்த ஆண்டு, 20 தானியங்கி சிக்னல்களில் சோலார் பேனல் அமைக்கப்பட்டது.  மின்சார சப்ளை இல்லாமல் இயங்கும் வகையில் இவை அமைக்கப்பட்டது. ஆனால்,  இந்த சோலார் திட்டமும்  நடைமுறைக்கு வரவில்லை.  

* அபராதம் விதிப்பதில் குழப்பம்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, சிக்னல் கண்காணிப்பு கேமரா மூலமாக வாகன எண் அறிந்து, அந்த முகவரிக்கு அபராத ரசீது அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் அவினாசி ரோட்டில் மட்டும் பல ஆயிரம் வாகனங்களுக்கு இந்த அபராத ரசீது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பலர் வாகனத்தை விற்று விட்ட காரணத்தாலும், முகவரி மாற்றம் செய்து இயக்கி வருவதாலும் அபராத தொகையை முழுமையாக வசூலிக்க இயலவில்லை.

Related Stories: