தமிழக காவல்துறையின் அவலநிலை முதுகெலும்பாக உள்ள தொழில்நுட்ப பிரிவில் டிஎஸ்பி உட்பட 140 காலிப்பணியிடங்கள்

* பணிச்சுமையால் தவிக்கும் போலீசார்

* குற்றவாளிகளை பிடிப்பதிலும் சிக்கல்

வேலூர்: தமிழகம் காவல்துறையின் முதுகெலும்பாக உள்ள தொழில்நுட்ப பிரிவில் டிஎஸ்பி உட்பட 140 காலிபணியிடங்கள் உள்ளதால், பணிச்சுமை ஏற்படுவதோடு, குற்றவாளிகளையும் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1லட்சத்திற்கும் அதிகமான காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் காவல்துறையில் உள்ள பெரும்பாலான பிரிவுகளில் ஆயிரக்கணக்கான காவலர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிகுவித்து வருகிறார்களே தவிர, எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதானால் அதனை சரிசெய்ய வேண்டிய தொழில்நுட்ப பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு மறந்துவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று எந்தவிதமான குற்றசம்பவங்களாக இருந்தாலும், சிசிடிவி கேமரா பதிவுகள் எடுக்க தொழில்நுட்ப பிரிவு போலீசாரின் உதவியே மிக அவசியமானதாக உள்ளது. அதேபோல் வாக்கி, டாக்கி, டேப்லெட் போன்கள் உட்பட அனைத்து விதமான எலக்ட்ரானிக் உபகரணங்களை சரிசெய்ய தொழில்நுட்ப பிரிவு மிக அவசியமான ஒன்றாக உள்ளது.

இப்படி காவல்துறையின் மிக முக்கியமானதும், முதுகெலும்பாக விளங்கக்கூடிய தொழில்நுட்ப பிரிவில் கடந்த ஆண்டில் காலிப்பணியிடங்கள் நிரப்ப 320 எஸ்ஐகள் தேர்வு செய்யப்பட்டனர். கடைசியாக 3 220 பேர் மட்டுமே பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. 100 எஸ்ஐகள் காலிப்பணியிடங்களால், தொழில்நுட்ப பிரிவு போலீசார், காலிபணியிடங்களுக்கான பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனால் அதிக மனஉளைச்சல் ஏற்பட்டு, பணிகளில் கவனம் செலுத்தமுடியாமல், பணிகளை சுமையாகவே பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்ஐகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 36 டிஎஸ்பிக்கள் பணியிடம் காலியாக உள்ளது. அதோடு உயர்அதிகாரிகள் பிரிவில் எஸ்பி, ஐஜி பணியிடங்களும் காலியாக உள்ளது.

இப்படி மிக முக்கியமான தொழில்நுட்ப பிரிவில் எஸ்ஐ தொடங்கி ஐஜி வரையில் சுமார் 140 காலிப்பணியிடங்கள் உள்ளதால், காவல்துறையின் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கிப்போயுள்ளது. இதன்காரணமாக குற்றவாளிகளை பிடிப்பதிலும் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு காவல்துறையில், தொழில்நுட்ப பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தொழில்நுட்ப பிரிவில் எலக்ட்ரானிக் பொருட்களை சரிசெய்ய உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் மத்தியிலேயே கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்பான்சரில் வைக்கும் கேமராக்கள் சீரமைக்க நிதி கிடையாது

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் வைக்கப்பட்ட கேமராக்களை விட, தனியார் தொண்டுநிறுவனங்களின் ஸ்பான்சர் மூலமாகவே அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் வைக்கப்பட்ட கேமராக்கள் பழுதடைந்தால், அந்த கேமராக்களின் பழுதை சரிசெய்ய அரசு சார்பில் நிதி கிடையாதாம். அரசு சார்பில் வழங்கிய கேமராக்களுக்கு மட்டும்தான், நிதி ஒதுக்கப்படுமாம். இதனால் பல்வேறு இடங்களில் பழுதாகி கிடக்கும் கேமராக்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. கேமராக்களின் பழுதை சரிசெய்யவும் காவலர்கள் ஸ்பான்சர்களை தேடி அலைய வேண்டிய அவலநிலையாக உள்ளது என்று போலீசார் புலம்பி வருகின்றனர்.

Related Stories: