போடி பகுதியில் பெய்த மிதமான மழையால் கருகிய மா பூக்கள்: விவசாயிகள், வியாபாரிகள் கவலை

போடி: போடி பகுதியில் 2 நாட்கள் பெய்த மிதமான மழையால், மா மரங்களில் பூத்திருந்த மா பூக்கள் கருதிவிட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் மா விளைச்சல் இரண்டாம் இடத்தில் உள்ளது. போடி அருகே புதூர், வலசை, வடக்கு மலை, முந்தல், பீச்சாங்கரை, ஊத்தாம்பாறை, அடகுபாறை, பரமசிவன் மலை அடிவாரம் உள்ளிட்ட சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காசாலட்டு, செந்தூரம், பங்கனபள்ளி, காளாப்பாடி, கள்ளா மாங்காய் என பல்வேறு ரகங்களில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும் மா விவசாயம் தனித் தோப்புகளாக வருடம் 4 மாதம் சாகுபடியாக செய்து வருகின்றனர்.

ஒரு ஏக்கருக்கு களையெடுப்பு, மருந்தடிப்பு, தொடர் பராமரிப்பு என 50 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவிடுகின்றனர். கோடை காலத்தில் ஒரு ஏக்கரில் பலனாக வரும் போது சுமார் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையில் விவசாயிகளுக்கு மகசூலாக கிடைக்கிறது. மா சீசன் துவங்குவதற்கு முன்னதாக ஜனவரி இறுதியிலேயே குளிர் காலம் முடிவடையும் தருவாயில் பூ பூக்க துங்கி காய்கள் காய்த்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக போடி பகுதியில் பெய்த லேசான, பரவலான மழையால் மாமரங்களில் உள்ள பூத்துள்ள பூக்களில் 30 சதவீதம் வரை கருகியுள்ளது. மீதமுள்ள 70 சதவீத பூக்களில் பிஞ்சுகள் பிடித்து அறுவடைக்கு எவ்வாறு வரும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. மேலும் சிறு மா பிஞ்சுகளும் உதிர்த்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது பெய்த திடீர் மழையால் மா பூக்கள் கருகுவதாலும், பிஞ்சுகள் உதிர்வதாலும் நடப்பு சீசனில் மா உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது. இதனால் விலை அதிகரிக்கும் நிலையே உள்ளது என விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Related Stories: