தூர்வாரியதாக அறிவிப்பு பலகை வைப்பு; தூர் வாராத ஏரிக்கு ரூ25 லட்சம் செலவு கணக்கு: அதிகாரிகள் முறைகேடு... பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

சேலம்: சேலம் மாவட்டம் பனமரத்துபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாழிக்கல்பட்டி ஊராட்சியில் பாப்பன்குட்டை ஏரி உள்ளது. சுமார் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, அப்பகுதியில் உள்ள நாழிக்கல்பட்டி, வெடிகாரன்புதூர், பாரப்பட்டி, கொழிஞ்சிபட்டி, பூலாவரி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியின் பாசன பரப்பாக 300 ஏக்கர் விவசாய நிலமும் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஏரிக்கு கல்வராயன்மலையில் இருந்து நீர் வரும் பாதை முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், கடந்த 15 ஆண்டுகளாக நீர் வரத்து இன்றி வறண்டு, முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்த இந்த ஏரியை தூர் வாரி, நீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால்,மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இந்த ஏரியில் இருந்து மண்ணை மட்டும் சிலர் சட்ட விரோதமாக எடுத்துச் சென்றனர். அதனை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இச்சூழலில், ஏரியின் கரையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் 2 அறிவிப்பு பலகைகள் நடப்பட்டது. அந்த பலகைகளில், ஏரியின் இரு வேறு பகுதியில் ரூ25 லட்சம் செலவில் பாப்பன்குட்டை ஏரியை ஆழப்படுத்தி தூர் வாரியதாக எழுதபட்டு இருந்தது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கூலியாக தொழிலாளர்களுக்கு பணம் வழங்கி உள்ளதாகவும், கருவிகள் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து நேற்று,மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், “தங்கள் பகுதியில் பாப்பன்குட்டை ஏரியை தூர்வாராமலே,ரூ25 லட்சத்திற்கு தூர்வாரியதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என மனு கொடுத்தனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில்,”18 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பாப்பன்குட்டை ஏரியில் சிறிய அளவில் கூட பணியை செய்யாமல் ரூ25 லட்சம் செலவில் தூர் வாரியதாக 2 இடத்தில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.100 நாள் வேலை திட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இப்பணியை கூலியாட்களை வைத்து செய்ததாக தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இங்கு ஒரு தொழிலாளர் கூட வேலைபார்க்கவில்லை.

தொழிலாளர்கள் யாரும் வேலை செய்யாதநிலையில், அவர்களுக்கு ரூ24 லட்சம் வரை கூலி வழங்கியதாக கணக்கு எழுதி வைத்துள்ளனர். தற்போதும் ஏரி, முட்புதர்கள் நிறைந்து இருக்கிறது. அதிகாரிகள் வைத்த அறிவிப்பு பலகை படி பார்த்தால்,இந்த ரூ25 லட்சம் எங்கே போனது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர். ஏரியில் வேலையே செய்யாமல், அறிவிப்பு பலகை வைத்து சிக்கிக்கொண்ட அதிகாரிகள் தற்போது உயர் அதிகாரிகளிடம் சென்று தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இந்த முறைகேட்டை முறையாக விசாரித்து கலெக்டர் ராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: