பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டரில் சிறப்பு பயிற்சி: பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்

ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் கடல் பகுதியில் இந்திய கடற்படை இளம் கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய கடற்படையில் பயிற்சி முடித்த இளம் கடற்படை வீரர்களுக்கு ஆழமான கடல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு மீட்பு பயிற்சிகள் அளிக்கப்படும். நேற்று பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை சார்பில் இளம் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கடற்படையில் சேர்ந்த இளம் வீரர்கள் பலரும் கடல் மட்டத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றை பிடித்துக்கொண்டு கீழிறங்கி கடல் மட்டத்தை தொட்டுவிட்டு மீண்டும் மேலே செல்வது,

கயிற்றில் தொங்கிக்கொண்டே பறப்பது போன்ற பயிற்சியில் ஈடுபட்டனர். அனுபவம் வாய்ந்த கடற்படை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து மன்னார் வளைகுடா தீவுப்பகுதியிலும் ஹெலிகாப்டரை இறக்கி பயிற்சியில் ஈடுபட்டனர். கடல் மேல் நேற்று நடைபெற்ற இளம் கடற்படை வீரர்களின் வான்வழி சிறப்பு பயிற்சியை மீனவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்தனர். நேற்று துவங்கி தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இளம் கடற்படை வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி இக்கடல் பகுதியில் நடைபெற உள்ளது.

Related Stories: