யெஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 3 நாட்களில் தளர்த்தப்படும்; நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: யெஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 3 நாட்களில் தளர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யெஸ் வங்கியின் புதிய இயக்குநர் பட்டியல் 7 நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ வங்கி ரூ.1,000 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளரர். வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதிநிலை படு மோசமாக உள்ளது.

கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் யெஸ் வங்கி, மூலதன நிதியை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில், இந்த வங்கியை மீட்கும் வகையில் இதன் பங்குகளை வாங்குமாறு பாரத ஸ்டேட் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், எஸ்பிஐயும், எல்ஐசியும் இணைந்து 49 சதவீத பங்குகளை வாங்க வாய்ப்புகள் உள்ளன.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் 50,000க்கு மேல் எடுக்க தடை விதித்து நிதியமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. நிதி நெருக்கடியை சரிசெய்ய போதிய நடவடிக்கைகளை யெஸ் வங்கி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வங்கி நடவடிக்கைகளை ஆர்பிஐ கட்டுப்படுத்தியுள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். இதனிடையே  தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு முறைகேடாக பல ஆயிரம் கோடி கடன் வழங்கி, ‘யெஸ் வங்கி’யை திவாலாக்கிய அதன் நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று யெஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 3 நாட்களில் தளர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: