என்.பி.ஆரில் உள்ள 3 அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்டும், மத்திய அரசு பதில் தரவில்லை.. தமிழகத்தில் கணக்கெடுப்பு பணி நிறுத்தம் : பேரவையில் அமைச்சர் விளக்கம்

சென்னை : தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து சட்டப்பேரவையில் திமுக மற்றும் அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை கூடியதும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி எதிர்கட்சிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாக நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், என்பிஆர் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதால் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயக்குமார் தெரிவித்து இருப்பதை சுட்டிக் காட்டினார். எனவே என்.பி.ஆருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஆர்.பி. உதயக்குமார் பேரவையில் அறிவிப்பு

இதற்கு பதிலளித்து பேசிய ஆர்.பி. உதயக்குமார், மத்திய அரசிடம் 3 அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது வரை என்பிஆர் கணக்கெடுப்பு பணி துவங்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். முன்னதாக நேற்று மாலை செய்தியாளர்களிடம் சொன்னதை அமைச்சர் உதயக்குமார்  அவையில் சொல்ல வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து, என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் பேரவையில் விளக்கம் அளித்தார்.

ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

இதனிடையே மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட சில விஷயங்களை நீக்க வேண்டும், இதனால் இஸ்லாமிய மக்கள் அச்சப்படுகின்றனர் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் , மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இந்நிலையில் அமைச்சர் உதயகுமாரின் இந்த பேச்சு அவை மீறல் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் சபாநாயகரோ உதயகுமாரின் பேச்சு அவை மீறல் இல்லை என்றும் மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தினார். 

Related Stories: