நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் வருமா, வராதா?

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு கோயில் உள்ளிட்ட நவகிரக கோயில்கள் மற்றும் வேளாங்கண்ணி, வேதாரண்யம், நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு கார் மற்றும் சுற்றுலா பேருந்துகளில் வந்து செல்கின்றனர். நீடாமங்கலம் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்பதற்கும், வணிகர்கள் வணிகம் செய்வதற்கும் நீடாமங்கலத்திலிருந்து கும்பகோணம், திருவாரூர், நாகை, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்,திருச்சி சென்று வருகின்றனர்.

மேலும் நீடாமங்கலம் வழியாக மன்னை-சென்னை பாமணி மன்னை-கோவை செம்மொழி, மன்னை- பகத் கி ஹோதி ராஜஸ்தான்,கோவா- வேளாங்கண்ணி, மன்னை-திருப்பதி, எர்ணாகுளம்-காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்களும், மன்னை-மானாமதுரை, திருச்சி-காரைக்கால், திருச்சி வேளாங்கண்ணி, திருச்சி நாகூர் உள்ளிட்ட பல்வேறு பயணிகள் ரயில்களும், மேலும் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் தாலுக்கா பகுதிகளிலிருந்து சம்பா மற்றும் தாளடி அறுவடை செய்த நெல் மூட்டைகளை நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அரவைக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில் வேகன் மூலம் அனுப்பப்படுகிறது. அது மட்டுமின்றி அவீன அரிசி ஆலை சுந்தரகோட்டை,மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி உள்ளிட்ட இடங்களிலிருந்து அரவை செய்த அரிசி மூட்டைகளை தமிழகத்தில் உள்ள அங்காடிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.மேலும் காரைக்காலிலிருந்து சரக்கு பெட்டிகளில் பல்வேறு ஊர்களுக்கு நிலக்கரி ஏற்றி ரயில்கள் செல்கிறது.

இதனால் நீடாமங்கலம் ரயிவே கேட் நாள் ஒன்றுக்கு சுமார் 17 தடவையாவது மூடப்படுகிறது. அந்த நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மேம்பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சாலைமறியல்கள் நடைபெற்றது. இதனையறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் அமைக்கப்படும் என 110 விதிபடி அறிவித்து அதற்கான ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டது. பிறகு மேம்பாலம் கட்டுவதற்கான அளவிடும் பணிகள் தொடங்கியது.

ஆனால் இதுவரை பல்வேறு வரைபடங்கள் மூலம் அளவிடும் பணிகள் நடந்தும் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த செய்தி தினகரனில் அடிக்கடி வெளிவந்துள்ளது. செய்தி வெளிவந்த சில நாட்களுக்கு பிறகு மண் பரிசோதனை மற்றும் அளவிடும் பணிகள் நடைபெறும். அதன் பிறகு அந்த பணி அப்படியே நிறுத்தப்பட்டு விடும். இதனால் நீடாமங்கலத்திற்கு ரெயில்வே மேம்பாலம் வருமா? வராதா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு மாணவ மாணவிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வர்த்தகர்கள் நலன்கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து மேம்பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என நீடாமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: