ஒகேனக்கல்லில் பரபரப்பு நடுரோட்டில் வாலிபரை விரட்டிய ஒற்றை யானை

பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை ஒற்றை யானை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், அந்த நபர் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த சின்னஆஞ்சநேயர் கோயில் அருகே, கூட்டத்தை பிரிந்து வந்த ஒற்றை யானை ஒன்று, கடந்த 10 நாட்களாக சுற்றித்திரிந்தபடி உள்ளது. ஒகேனக்கல் வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி, சாலையை கடந்து கிராமப்பகுதிக்குள் இந்த யானை வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதையடுத்து, ஒகேனக்கல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லும்படி, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில், ஒகேனக்கல் சாலை வழியாக சின்னஆஞ்சநேயர் கோயில் அருகே, இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.  அப்போது, சாலையோரம் இருந்த புதர் மறைவில் ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. இதையறியாத அந்த நபர், இருசக்கர வாகனத்தில் சாவகாசமாக வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென புதர் மறைவில் இருந்து வெளிப்பட்டு சாலைக்கு வந்த ஒற்றை யானை அந்த நபரின் அருகாமையில் வந்தது.

எதிர்பாராத நேரத்தில், கண் முன்னே திடீரென ஒற்றை யானை வந்து நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், செய்வதறியாமல் திகைப்பில் ஆழ்ந்தார். பின்னர், கண நேரத்தில் சுதாரித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றார். இதை கண்டு ஆவேசமடைந்த யானை, அவரை வேகமாக துரத்த முயன்றது. ஆனால், யானையிடம் சிக்காமல் அந்த நபர் படுவேகமாக வாகனத்தை ஓட்டியபடி, அந்த இடத்தை கடந்து, மயிரிழையில் உயிர் தப்பினார். பின்னர், அதே இடத்தில் சிறிது நேரம் உலாவிய ஒற்றை யானை, அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த சம்பவத்தால் ஒகேனக்கல் சாலையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: