கடலூரில் ரூ.300 கொடுத்து போலி ரேஷன் கார்டு தயார் செய்யும் மோசடி கும்பல்: அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை சிக்கியது!

கடலூர்:  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்.எம்.எஸ் என்ற தனியார் கணினிமையம் ஒன்றில் 300 ரூபாய் கொடுத்தால் போலி ரேஷன் கார்டுகள் தயார் செய்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆர்.எம்.எஸ் கணினிமையத்திற்கு சென்று தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில், தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சாருலதா மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது அங்கு 6 பெண்களை வேலைக்கு வைத்து, வாடிக்கையாளர்களிடம் விபரங்களை பெற்றுகொண்டு போலியாக ஸ்மார்ட் கார்டுகள் தயாரித்து கொடுப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்து பார்கோடு ரீடருடன் ஏராளமான போலி ரேஷன் அட்டைகளை கைப்பற்றிய வட்ட வழங்கல் அலுவலர் சாருலதா, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். கணினிமையத்தின் சுவற்றில் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் தயார்செய்து தரப்படும் என்பதை துண்டு பிரசுரமாகவே ஒட்டிவைத்திருந்தனர்.

இந்நிலையில், காவல் துறையினர் வந்து விசாரணை மேற்கொண்ட போது கடையின் உரிமையாளரான முகமது சம்ஜித் கொடுத்த விளக்கம்தான் சோதனை நடத்த மேலும் தூண்டியது. போலியாக ரேஷன் கார்டுகள் தயாரிக்கவில்லை என்றும், கலர் ஜெராக்ஸ் மட்டுமே எடுத்து கொடுப்பதாகவும், அந்த ஜெராக்சில் பார்கோடு ரீடர் வேலை செய்யப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார். இதனை கேட்டதும் அங்கு நடந்த சட்ட விரோத ரேஷன் கார்டு தயாரிப்பு உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக போலி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டர், லேப்டாப், அச்சிடப்பட்ட 33 போலி ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கடையின் உரிமையாளர் முகமது சம்ஜித் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக இந்த கடையை நடத்தி வருவதாகவும், இவருக்கு காட்டுமன்னார்கோவிலில் மேலும் 2 கடைகள் இதேபோன்று செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. கடந்த ஓராண்டாக தமிழக அரசு ஸ்மார்ட் குடும்ப அட்டை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ள நிலையில், இந்த கணினிமையத்தில் சட்டவிரோதமாக போலி கார்டுகள் தாயாரானது கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கமாக தமிழ்நாடு இ-சேவை மையத்திற்கு சென்று புதிய ரேஷன் கார்டு மற்றும் தொலைந்துபோன கார்டு விபரங்களை பதிவு செய்து விட்டால், தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு குடும்ப அட்டை நகல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவல் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர் அரசுக்கு ரூ.20 செலுத்தி புதிய ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம். அதுவும் கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை அச்சிடும் பணி இன்னும் தொடங்கவே இல்லை, சென்னையில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கணினிமைய உரிமையாளருக்கு ஆதரவாக ஜமாத்தார்கள் என சிலர் களம் இறங்கியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரி சாருலதாவை சில முக்கிய பிரமுகர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறையினருக்கும் எவ்வித தகவலும் அவர் அளிக்கவில்லை. பின்னர், அதிகாரி சாருலதா, சிக்கியவர் மீது புகார் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தபின் தெரிவிக்கப்படும் என கூறிவிட்டு சென்றார்.

Related Stories: