தடை செய்த வேதிப்பொருளில் தயாரிப்பா? பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிரடி ஆய்வு: சிவகாசியில் பரபரப்பு

சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலைகளில்  தடை செய்யப்பட்ட வேதிப்பொருளால் பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என சிபிஐ அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில், மேற்குவங்கத்தை சேர்ந்த அர்ஜூன் கோபால் என்பவர், சிவகாசி பகுதியில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருளை பயன்படுத்தி,  பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்றம் மனுவை கடந்த 3ம் தேதி விசாரித்து, சிவகாசி  பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து 6 வாரத்தில் அறிக்கை தாக்க செய்ய உத்தரவிட்டது. இதன்படி 14 சிபிஐ அதிகாரிகள், 2  ஏடிஎஸ்பிகள், ஒரு டிஎஸ்பி ஆகியோர் 7 குழுக்களாக பிரிந்து சிவகாசி பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்  (பேரியம் நைட்ரேட்) பயன்படுத்தப்படுகிறதா என நேற்று ஆய்வு செய்தனர். ஒவ்வொரு ஆலையிலும் சுமார் 5 மணி நேரம் ஆய்வு நடந்தது.  இதைதொடர்ந்து சிவகாசியிலுள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டன. சிபிஐ அதிகாரிகளின் இந்த திடீர்  ஆய்வால் சிவகாசியில் பரபரப்பு நிலவியது.

மத்திய ஆய்வகத்திற்குசென்ற ரசாயனங்கள்சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும்  ரசாயனங்கள் மற்றும் அதன் கலவைகளையும், தயார் செய்யப்பட்ட அனைத்து வகை பட்டாசுகளையும் அட்டைப்பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து  எடுத்துச் சென்றனர். மத்திய ஆய்வகங்களுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: